சிறுகதைப் போட்டி:
சிறுகதை என்பது சுருக்கமான கதை, இது பெரும்பாலும் ஒரு மையக்கருவினை அல்லது நிகழ்ச்சியின் அனுபவத்தை விவரிக்கும் இலக்கிய வகையாகும். தமிழர்கள் காலந்தோறும், இராமாயணம், மகாபாரதம், புராணக் கதைகள், கிராமியக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் என பல்வேறு கதைகளைக் கேட்டு வருகின்றனர். கதைகளின் வழியாக ஒழுக்கநெறிகள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன.
வாழ்க்கையின் ஒரு சின்னஞ்சிறு காட்சியோ, மின்னல் போன்ற நிகழ்ச்சியோ, மெல்லிய அசைவோ, சூறாவளியின் சுழற்சியோ, நீர்க்குமிழியின் வட்டமோ, ஏதாவது ஒரு அணுவின் சலனமோ சிறுகதையாக இடமுண்டு.
சிறுகதைக்கு இலக்கணமோ, வரைமுறையோ, பண்போ கிடையாது என்று கூறுவோரும் உண்டு. ஆனால் சிறுகதைக்கு பண்போ தனி இலக்கணமோ இல்லை என்று கூறிவிடமுடியாது என்போரும் உண்டு. சிறுகதைக்கென இரண்டு நூற்றாண்டு காலப் புதிய மரபு தோன்றிவிட்டது. 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் சிறுகதையின் பொதுவான தன்மைகள் குறித்து ஆய்வுக் கருத்துகள் வெளிவந்துள்ளன. இதன் அடிப்படையில் ஆய்வாளர்கள் சிறுகதைக்கெனச் சில வரைமுறைகளைச் சுட்டிக் காண்பித்துள்ளனர். அரைமணிமுதல் இரண்டு மணிநேரத்துக்குள் படித்து முடிக்கக்கூடியது சிறுகதை என்பர். சுருங்கச் சொல்லுதலும், சுருக்கெனச் சொல்லுதலும் இதன் உத்திகளாகும்.
சிறுகதை என்றால் அளவில் சிறியதாய் இருக்க வேண்டும். தனிமனித அல்லது சமுதாய வாழ்க்கையைச் சுவையோடு பிரதிபலிக்க வேண்டும். சிறுகதையில் ஒரு மனிதர் அல்லது ஓர் உணர்வு, ஒரு நிகழ்ச்சி அல்லது ஒரு சிக்கல் தான் தலைதூக்கியிருக்க வேண்டும். சிறுகதை அளவிற் சிறியதாய், முழுமை பெற்று இருக்க வேண்டும். சிறுகதை நம்பக் கூடிய உண்மைத் தன்மையினைக் கொண்டு விளங்குதல் வேண்டும். நல்ல சிறுகதை ஆல விதையைப் போல் விரிவாகக் கூடிய கதைக்கருவைக் கொண்டிருத்தல் வேண்டும்.
சிறுகதை போட்டியில் அனைவரும் பங்கு பெறலாம்.
சிறுகதை படைப்புகள் சொந்த ஆக்கமாகவும் முன்னர் வெளிவராததாகவும் இருத்தல் வேண்டும்.
சிறுகதைகள் 1500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சிறுகதைகளை எழுத்துருவில் தட்டச்சு செய்து மின்னஞ்சல், புலனம் மூலம் அனுப்பலாம்.
சிறுகதை படைப்புகளுடன் தங்களது நிழற்படம் மற்றும் அலைபேசி எண் பதிவு செய்ய வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முதல் மூன்று சிறுகதை படைப்புகளுக்கு பரிசுகளும் சான்றிதழும் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் சிறந்த சிறுகதைகள் www.tamilolympiad.org என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.
தலைப்புடன் பொருந்தக்கூடிய சிறுகதைகள் மட்டுமே ஏற்கப்படும்.
இது எனது சொந்தக் கதையே என்று உறுதிப்படுத்தி கையெழுத்திட்டு கதையுடன் இணைக்க வேண்டும்.
போட்டி முடிவுகள் இரு வாரத்திற்குள் அறிவிக்கப்படும். அதற்கிடையில் போட்டியாளர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம்.
சிறந்த சிறுகதைக்குச் சிறப்பான தொடக்கம் இன்றியமையாததாகிறது. அப்பொழுது தான் அதன் தொடர்ச்சி நெகிழ்ச்சியின்றி அமையும். படிப்போரின் கவனத்தை ஒருமுகப்படுத்தவும் உதவும். சிறுகதையின் தொடக்கம் வாசகர்களை ஈர்த்து, படிக்கத் தூண்டுவதாய் இருத்தல் வேண்டும். சிறுகதையின் தொடக்கத்தைப் போன்றே முடிவும் முக்கியத்துவம் பெறல் வேண்டும். சிறுகதையின் முடிவு இறுதிவரை படிப்போரின் கவனத்தைக் கவரக் கூடியதாய் இருக்க வேண்டும். சிறுகதையில் முடிவு கூறப்படவில்லை எனில் அது மனத்தில் நிலைத்து நிற்காது. கதையின் முடிவு உரைக்கப்படல் அல்லது சிந்திக்கச் செய்தல் ஆகியவற்றின் மூலமே படைப்பாளரின் ஆற்றல் உணரப்படும்.