சங்க இலக்கியம்:
தென்னிந்திய புராணங்களில் காணப்படும் கூற்றுகளின்படி, முற்காலத் தமிழகத்தில் தலைச் சங்கம், இடைச் சங்கம் மற்றும் கடைச் சங்கம் ஆகிய மூன்று சங்கங்கள் இருந்ததாக நம்பப்படுகிறது. இம்முச்சங்கங்களில் மூன்றாவது சங்க காலமான கடைச்சங்க காலத்தையே வரலாற்றாசிரியர்கள் சங்ககாலமாக எடுத்துக் கொள்கின்றனர். முதல் இரண்டு சங்கங்களும் புராணங்களில் புகழ்பெற்று வாழ்பவை என்றே கருதுகின்றனர். ஒவ்வொரு சங்கத்திலும் அச்சங்க காலத்திற்கென சங்க இலக்கியங்கள் படைக்கப்பட்டு தோற்றம் கண்டுள்ளதாகக் கருதப்படுகிறது. கல்வெட்டுகள், சங்க இலக்கியங்கள் மற்றும் தொல்பொருள் தரவுகள் ஆகியவையே தென்னிந்தியாவின் ஆரம்ப கால வரலாற்று ஆதாரங்களாகத் திகழ்கின்றன.
சங்க இலக்கியம், தற்போது கண்டுபிடிக்கப்பட்ட வரை 473 புலவர்களால் எழுதப்பட்ட 2381 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்புலவர்களுள் பல தரப்பட்ட தொழில் நிலையுள்ளோரும் பெண்களும், நாடாளும் மன்னரும் உண்டு. சங்க இலக்கியங்கள் அக்காலகட்டத்தில் வாழ்ந்த தமிழர்களின் தினசரி வாழ்க்கை நிலைமைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாய் உள்ளன.
சங்கம் என்பது பல்வேறு தமிழ்ப் புலவர்கள் கூடித் தங்கள் பாடல்களை வெளியிடப் பயன்படுத்திய ஒரு பழைய அமைப்பாகும். பாண்டிய மன்னர்களின் ஆதரவோடு அவர்கள் மதுரையில் அடிக்கடி கூடியிருந்துள்ளனர். சங்க காலம் என்பது கி.மு. 400 லிருந்து கி.பி. 300 வரை உள்ள காலம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. சங்கம் பற்றியக் குறிப்புகள் முதன் முதலில் எட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த இறையனார் அகப்பொருளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சங்க இலக்கியம், காதல், வீரம், போர், அரசியல், வணிகம் போன்றவற்றை உள்ளடக்கியது. சங்க கால இலக்கியத்தில் ஒரு சிறு பகுதியே நமக்கு இப்போது கிடைத்துள்ளது. பல்வேறு சங்க கால தமிழ் இலக்கியங்கள் கிடைக்காமல் போயுள்ளன.
சங்க காலத்தில் தான் தமிழ் மொழி வளர்ச்சி உச்சம் பெற்று இலக்கிய வெளிப்பாட்டிற்கு மிகச் சிறந்த மொழியாக இருந்துள்ளது. சமூக வாழ்வியல் முறைகளை மிகத் தெளிவாக சங்க இலக்கியங்கள் வரையறுக்கின்றன. சங்க இலக்கியங்கள் உவமைகளால் சிறப்புற்ற இலக்கியங்களாகும்.
19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் அறிஞர்களான சி. வை. தாமோதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர், ஆகியோரின் முயற்சியினால் சங்க இலக்கியங்கள் அசச்சுருப்பெற்றன.
கிழடியில் கிடைக்கப் பெற்றுள்ள சில தடயங்கள், நம் தமிழர் பண்பாடு கி.மு. 6 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையது என குறிப்பிடப்பட்டுள்ளது. நம் பழந்தமிழர் நாகரிகம், பண்பாடு மிகவும் தொன்மையானது என்பது கிழடியில் கிடைத்த சான்றுகள் ஐயம் இல்லாமல் நிரூபித்துள்ளது.
எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள் பதினெண்மேற்கணக்கு நூல்கள் எனவும், சங்கம் மருவிய நூல்கள் பதினென்கீழ்கணக்கு நூல்கள் என பெரும் பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளது.
1. பதினெண்மேற்கணக்கு நூல்கள் – அதிக அடிகள் உடையது
2. பதினென்கீழ்கணக்கு நூல்கள் – 2 அல்லது 4 அடிகள் உடையது
பதினெண்மேற்கணக்கு நூல்கள்:
1. நற்றிணை
2. குறுந்தொகை
3. ஐங்குறுநூறு
4. பதிற்றுப்பத்து
5. பரிபாடல்
6. கலித்தொகை
7. அகநானூறு
8. புறநானூறு
9. திருமுருகாற்றுப்படை
10. பொருநராற்றுப்படை
11. சிறுபாணாற்றுப்படை
12. பெரும்பாணாற்றுப்படை
13. நெடுநல்வாடை
14. குறிஞ்சிப்பாட்டு
15. முல்லைப்பாட்டு
16. மதுரைக்காஞ்சி
17. பட்டினப்பாலை
18. மலைப்படுகடாம்
பதினென்கீழ்கணக்கு நூல்கள்:
1. நாலடியார்
2. நான்மணிக்கடிகை
3. இன்னா நாற்பது
4. இனியவை நாற்பது
5. கார் நாற்பது
6. களவழி நாற்பது
7. ஐந்திணை ஐம்பது
8. ஐந்திணை எழுபது
9. திணைமொழி ஐம்பது
10. திணைமாலை நூற்றைம்பது
11. திருக்குறள்
12. திரிகடுகம்
13. ஆசாரக் கோவை
14. பழமொழி நானூறு
15. சிறுபஞ்சமூலம்
16. கைந்நிலை
17. முதுமொழிக் காஞ்சி
18. ஏலாதி
மேலே சொன்ன இலக்கியங்கள் மட்டுமே சங்க இலக்கியங்கள் எனக் கருத முடியாது. பல சங்க இலக்கியங்கள் நமக்குத் தெரியாமலே அழிந்துவிட்டது. தமிழர் நாம் அனைவரும் ஒன்றிணைந்து முயற்சி செய்தால் இன்னும் பல இலக்கியங்கள் நமக்கு கிடைக்கும். எனவே நாம் தமிழுக்காக தொண்டாற்றினால் நம் தமிழ் மொழி உலகம் உள்ள வரை உய்யும். வாழிய செந்தமிழ்! வாழிய தமிழ்மொழி.